ஏவாளின் குணாதிசய ஆய்வு

ஏவாளின் குணாதிசய ஆய்வு

ஏவாளின் குணாதிசய ஆய்வு 

வேதாகம மற்றும் இறையியல் கண்ணோட்டங்களில் ஓர் ஆய்வு

யார் : தேவனால் உலகத்தில் உண்டாக்கப்பட்ட முதல் பெண். ஆதாமின் மனைவி.

ஆதியாகமம் புத்தகத்தில் எழுதியுள்ளபடி, தேவனால் உருவாக்கப்பட்ட முதல் பெண் ஏவாள். தேவன் ஆதாமின் விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி ஆதாமினிடத்தில் கொண்டு வந்தார் (ஆதியாகமம் 2:22). ஆரம்பத்தில் அவள் ஆதாமுடன் இணைந்து பூரணமானவளாக இருந்தாள், அவர்கள் இருவரும் இணைந்து உலகத்தில் மனிதகுலத்தின் அடித்தளத்தை அமைத்தனர். ஆனால் சர்ப்பத்தால் வஞ்சிக்கப்ட்டு கர்த்தரின் சாபத்தை பெற்றாள். ஏவாளின் வாழ்க்கை மனித இயல்பின் சிக்கலான தன்மையையும், மனிதர்கள் தங்களுக்கு அளிக்கப்ட்ட சுதந்திரத்தை வைத்துக் கொண்டு தங்களுடைய சுய விருப்பத்தின்படி தவறாக செயல்படுவதால் வரும் விளைவுகளையும் காட்டுகிறது.

காலம்: மனித வரலாற்றின் ஆரம்பம்

ஆதியாகமத்தின் முதல் அத்தியாயங்களில், குறிப்பாக ஆதியாகமம் 2:21-22 மற்றும் 3:1-24 மற்றும் 4: 1 & 25 ஆகியவற்றில், ஏவாள் பற்றி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. "படைப்பு சகாப்தம்"  அல்லது உலகம் பாவமில்லாமல் இருந்த கால கட்டத்தில் இருந்து ஏவாளின் வாழ்க்கையானது ஏதேன் தோட்டத்தில் இருந்து தொடங்குகிறது, இது தேவனும், மனிதனும் சரியான உறவில் இருந்த இடம். இங்கு  ஏவாளின் வாழ்க்கையில் நிகழ்ந்த நிகழ்வுகள் பூமியில் மனித வரலாற்றின் தொடக்கத்தைக் கட்டமைத்தன. மேலும் இவை வேதத்தின் மற்ற பகுதிகளுக்கு அடித்தளமாக அமைக்கின்றது.

இடம் : ஏதேன் தோட்டம்

ஏதேன் தோட்டம் என்பது ஏவாள் படைக்கப்பட்ட மற்றும் அவளுடைய வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் நடந்த ஒரு அழகிய இடமாகும். இது பெருமளவு வளமிக்க இடமாக வேதாகமத்தில் விவரிக்கபட்டிருக்கிறது, நதிகள், மரங்கள்,விலங்குகள்,ஜீவ விருட்சம் மற்றும்  நன்மை தீமை பற்றிய அறிவின் மரம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு இடம் என்று ஆதியாகமம் 2 ஆம் அதிகாரத்தில் நம்மால் காண முடியும். இந்த தோட்டத்தில் ஏவாளும் ஆதாமும் இவ்வுலகை படைத்த கர்த்தருடனுன் வாழவும், அவர்களும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும், சுதந்திரமாகவும் வாழ வழிவகைகள் இருந்தது. ஆகமொத்தத்தில் இந்த தோட்டம் தேவனின் சிறந்த படைப்பின் ஒரு  எடுத்துக்காட்டே.

எபிரெய மொழியில் பெயர் வரையறை : 

Eve" என்ற பெயர் எபிரேய மொழியில் “ஹவ்வா” "Ḥawwāh" (חַוָּה) என்ற சொல்லிலிருந்து பிறந்தது."ஏவாள்" என்ற பெயருக்கு "ஜீவன்" அல்லது "ஜீவன் தரும்" என்று அர்த்தமாகும். ஆதியாகமம் 3:20-ன் படி “ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.” ஏவாள் அனைத்து ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்பதினால் அவளுக்கு இந்தப் பெயர் பொருத்தமானது. இந்த பெயர் ஒரு முன்னோடியாக அவளது பங்கையும் மனித வாழ்க்கையுடனான அவளது தொடர்பையும் பிரதிபலிக்கிறது.

ஏவாளின் நல்ல குணங்கள் : 

வேதாகமத்தில் இருந்து ஏவாளின் நல்ல குணாதிசயங்கள்:

ஏவாளிடம் நல்ல குணங்கள் இல்லாமல் இல்லை. அவள் ஆதாமின் துணையாகவும், கற்ப்பிலும், மதிப்பிலும் ஆதாமுக்கு சமமானவள் என்று வேதம் நமக்கு எடுத்துரைக்கிறது. "இவள் என் எலும்புகளும் என் மாம்சமுமாயிருக்கிறாள்; இவள் புருஷனிடத்திலிருந்து எடுக்கப்பட்டவள், இவள் ஸ்திரீ என்று அழைக்கப்படுவாள்" என்று ஆதாமின் மனம் ஏவாளை அடைந்தவுடன் களித்தது. இந்த அறிக்கை ஆதாமுக்கும் ஏவாளுக்கும் இடையிலான ஆழமான பிணைப்பையும் அவர்களின் இல்லற வாழ்க்கையையும் பிரதிபலிக்கிறது. ஏவாள் எல்லா உயிர்களுக்கும் தாய், இதுவே தேவனுடைய திட்டத்தில் அவளுடைய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் பாத்திரமாகும்.

1. ஆதாமுக்கு உதவியாகமும், துணையுமாக இருந்தாள்:

ஆதியாகமம் 2:18 - "பின்பு தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருக்கிறது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்."

2. எல்லா உயிர்களுக்கும் தாய்:

ஆதியாகமம் 3:20 - "ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயரிட்டான்; அவள் ஜீவனுள்ளவர்கள் எல்லாருக்கும் தாயானாள்."

3. குற்றத்தை ஒப்புக்கொள்வது: ஏவாள் தன் சுயநலத்தை ஏற்றுக்கொண்டு, பாவத்தைச் செய்யும் பொழுது தான் ஏமாற்றப்பட்டதாகச் சொல்கிறாள். இது ஒரு நிதானமான உணர்வை வெளிப்படுத்துகிறது, ஏனெனில் அவள் சுயநலத்தால் ஏமாறியதை உணர்ந்தார்.

ஆதியாகமம் 3:13 - "அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச் செய்தது என்ன என்றார். ஸ்திரீ: சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்."

4. குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயரிடுதல்:

தன்னுடைய குழந்தைகளுக்கு பெயரிடும்போது அவள் கர்த்தரால் தனக்கு நன்மை உண்டானது என்று எண்ணுகிறாள்.

ஆதியாகமம் 4: 1ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

ஆதியாகமம் 4:25 - "பின்னும் ஆதாம் தன் மனைவியை அறிந்தான்; அவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பெயரிட்டாள்; ஏனெனில் காயீன் கொன்றுபோட்ட ஆபேலுக்குப் பதிலாக தேவன் எனக்கு வேறொரு புத்திரனைக் கொடுத்தார்’என்றாள்.."

ஏவாளின் தவறுகள்: 

  1. சாத்தனின் தந்திரத்தை  உணராதிருந்தாள்:

கர்த்தர் முன்பதாகவே ஆதாமிடம் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை புசிக்கவேண்டாம் என்று கூறினார். ஆனாலும் ஏவாள் அதனை பொருட்படுத்தாது, சர்ப்பத்தின் தந்திரத்தை உணராமல் சர்ப்பம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தாள். அந்த சமயத்தில் சர்ப்பத்தின் தந்திரத்தை உணர்ந்து அதை தவிர்த்திருக்கலாம், ஆனால் அந்த சர்ப்பத்தின் கலந்துரையாடல்களுக்கு தொடர்ந்து செவி சாய்த்துக் கொண்டிருந்ததால் பாவம் செய்யக்கூடிய நிலை உண்டானது. இதனை ஆதியாகமம் 3ம் அதிகாரத்தின் தொடக்கத்திலே நாம் காணலாம். தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ என்றது. ஸ்திரீ சர்ப்பத்தைப் பார்த்து: நாங்கள் தோட்டத்தில் உள்ள விருட்சங்களின் கனிகளைப் புசிக்கலாம்.

2. வஞ்சிக்கப்பட்டாள்: 

ஏவாள் சர்ப்பத்தினால் எளிதாக வஞ்சிக்கபட்டாள் என்பதை வேதாகமம் நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. சர்ப்பம் நீங்கள் சாவதில்லை மற்றும் தேவர்களைப் போல் ஆவிர்கள் என்று கூறியவுடனே விழுந்துப்போனாள். ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை ஸ்தீரியனவளே வஞ்சிக்கப்பட்டாள் என்று வேதம் கூறுகின்றது. இக்காலத்தில் கூட சாத்தானும் ஏவாளை தேவன் அறிவார் என்று அவரின் நாமத்தைக் கொண்டே வஞ்சித்தது போல, பலர் ஆண்டவரின் நாமத்தை வைத்தே மக்களை வஞ்சிகின்றனர்.

ஆதியாகமம்  : 4.  அப்பொழுது சர்ப்பம் ஸ்திரீயை நோக்கி: நீங்கள் சாகவே சாவதில்லை. 5 நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது.

3. இச்சையினால் தேவனுடைய கட்டளையை மறந்துப்போனாள்:

ஏவாள் வலுசர்ப்பத்தின் வார்த்தைகளுக்கு செவி சாய்த்து அந்த விருட்சம் இருக்கின்ற இடத்திற்கு செல்கிறாள், அது மட்டுமல்லாது அதைப் பார்க்கிறாள், பின்பு இச்சித்து, அதை தன் கையினால் பறித்து பின் புசிக்கிறாள். அந்தக் கனியைக் கண்டவுடன் இச்சையினால்  தேவனின் கட்டளையை மறந்துப்போனாள். ஆதி 3: 6 (மு) அப்பொழுது ஸ்திரீயானவள் அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத்தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து.

4. கீழ்படியாமை:

மேல் கூறிய ஏவாளின் செயல்கள் தேவ கட்டளையை மீறியது மட்டுமல்லாது அவளது கீழ்ப்படியமையை தெளிவாக எடுத்துக்துரைக்கிறது. ஆண்டவர் புசிக்கக்கூடாது என்று விளக்கிய கனியை அவள் சென்று புசித்தாள்.

ஆதி 3: 11 அப்பொழுது அவர்: நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார்? புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தாயோ என்றார்.

5. தவறு செய்ய தூண்டினாள்:

ஏவாள் தவறு செய்த பின் தன்னுடைய கணவருக்கும் அந்தக் கனியை புசிக்கக் கொடுக்கிறாள்.  இதன் மூலம் அவள்  ஆதாமையும் பாவத்தில் விழப்பன்னினாள் என்பதைக் அறிந்துகொள்ளலாம்.

ஆதி 3: 6 (பி) அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

6. தான் செய்த தவறிற்கு மற்றவரை பலி சொல்லுதல்:

ஏவாள் தான் செய்த பாவத்திற்கு முதலாவது கர்த்தரிடம் மன்னிப்புக் கோரவில்லை மாறாக சர்ப்பம் என்னை வஞ்சித்ததினால்தான் நான் விலக்கப்பட்ட கனியை புசித்தேன் என்றே கூறுகிறாள்.இதுபோல இன்று நாமும் நம்முடைய பாவங்களுக்கு பலவிதமான சாக்குப் போக்குகளையும், சூழ்நிலையையும் குறை சொல்லுகிறோம்.

ஆதி 3: 13 அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ இப்படிச்செய்தது என்ன என்றார். ஸ்திரீயானவள் சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்

ஏதேன் தோட்டத்தில் ஏவாளின் கீழ்ப்படியாமை மற்றும் அவளது தீய குணங்கள் விலக்கப்பட்ட பழத்தை உண்ணக்கூடாது என்ற ஆண்டவரின்  கட்டளையை மீறுவதர்க்கும் அவள் சர்ப்பத்தினால் தூண்டப்படுவதற்கும், இச்சையினால் கனியை உண்பதற்கும் வித்திடுகிறது. அவளும் ஆதாமும் இந்த கீழ்ப்படியாமையின் செயலால் பிற்காலத்தில் பல விளைவுகளை சந்தித்தனர். அவைகள் அவளையும் ஆதாமையும் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் பாதித்தது. தேவனுடைய வார்த்தையை சந்தேகப்படுவது, ஏவாளின் சுயத்தை சார்ந்திருத்தல் மற்றும் அவளுடைய சொந்த முயற்சியால் அறிவையும் ஞானத்தையும் தேடுவது போன்றவைகள் தேவனுடைய அதிகாரத்திற்கு எதிரான சாத்தனுடைய கிளர்ச்சி போல, மனிதனுடைய கிளர்ச்சி அமைய வழிவகுத்த்தது. 

ஏசாயா 14 : 13. நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், 14. நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.

ஈவாளிற்கு கிடைத்த தண்டனை:

பாவம் செய்தால் தண்டனை உண்டு என்பதை ஏவாளின் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. அவள் செய்த செய்கையினால் கர்த்தரிடம் இருந்து சாபத்தை பெற்றுக்கொண்டாள். அது அனைத்து மனுகுலப் பெண்களுக்குமே பாதிப்பை உண்டாக்கியது.

ஆதி 3:16 “அவர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியாயிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய்; உன் ஆசை உன் புருஷனைப் பற்றியிருக்கும், அவன் உன்னை ஆண்டு கொள்ளுவான் என்றார்.”

அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாய் இருந்தார்கள் என்றே ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்தில் காண்கிறோம். அவள் செய்த பாவத்தின் விளைவாக குறிப்பாக தன் கணவனையும் விழப் பணியதால் இங்கு கணவன் மனைவி என்ற சரி சமமான உறவில் ஏவாள் ஆதமுக்கு கீழ் செல்கிறாள்.

கற்றுக்கொள்பவை :

ஏவாளின் வாழ்க்கை  நமக்கு சில முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொடுக்கிறது: 

  1. கீழ்ப்படியாமையின் விளைவுகள்: விலக்கப்பட்ட பழத்தை சாப்பிட ஏவாளின் முடிவு, பாவத்தின் சுபாவங்களையும் அதன் விளைவுகளையும் எடுத்துக்காட்டுகிறது. கீழ்ப்படியாமையின் ஆபத்துகள் மற்றும் தேவ ஞானத்தில் நம்பிக்கை வைப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி எச்சரிக்கைமூட்டுவதாக இந்த சம்பவங்கள் அமைகிறது.

  2. சோதனையின் பங்களிப்பு: சர்ப்பத்தை ஏவாள் சந்தித்தது சோதனையின் தன்மையையும், பகுத்தறிவின் அவசியத்தையும் விளக்குகிறது. சாத்தானின் இத்தகைய சூழ்ச்சிகள் எதிர்பாராத விதமாக  வரக்கூடும் என்றும், அதை எதிர்ப்பது கிறிஸ்துவை சாந்த நமக்கு அவசியம் என்றும் அது கற்பிக்கிறது. 

  3. சமூகத்தின் முக்கியத்துவம்: ஆதாம் ஏவாளுடன் கொண்டிருந்த உறவு, சமுதாய கட்டமைப்பின் முக்கியத்துவத்தையும், குடும்ப அன்பையும் வலியுறுத்துகிறது. அவர்கள் இருவரும் ஒருங்கிணைந்து முதல் மனித குடும்பத்தை உருவாக்குகின்றனர், அவர்களது கலந்துரையாடல்கள், ஒற்றுமை மற்றும் ஒருவரை ஒருவர் தாங்கும் பண்புகளை பிரதிபலிக்கிறது.

  4. சாத்தானின் சூழ்ச்சியை அறிவது: ஏவாள் சர்ப்பத்தின் தந்திரத்தை அறியாமல் அதில் விழுந்ததே இந்த பாவ சூழலுக்கு வழி வகுத்தது.சாத்தனின் தந்திரங்களை எளிதாக கண்டுக்கொள்ள, எப்பொதும் கர்த்தருடைய எல்லைகளுக்குளாகவே இருக்க வேண்டும். I பேதுரு 5 : 8. தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.

  5. வஞ்சிக்கப்பட்டத்தின் விளைவு: சர்ப்பத்தின் பொய்யான, போலியான  வார்த்தைகளுக்கு இடம் கொடுத்து ஏவாள் விழுந்துப்போனாள். நீங்கள் சாகவே சாவதில்லை என்ற வார்த்தையை நம்பி, ஆத்தும மரணத்தை பற்றி சற்றும் சிந்திக்காமல் சர்ப்பத்தின் வஞ்சனையான பேச்சினால் மதிமயங்கிப்போனாள். நாமும் அநேகமான கள்ள தீர்க்கதரிசிகளாலும், கள்ள போதனைகளாலும்  வஞ்சிக்கப்படதிருப்போம்(மத் 24:24). இக்காலத்திலும் அநேக கள்ளப் போதனைகள், அதாவது வேதத்திற்கு முரண்பாடான கருத்துக்கள் அதிகமாக போதிக்கப்படுகின்றது. அதனால் அந்த வஞ்சனைகளுக்கு நாம் இடம் கொடாமல் தப்பித்துக்கொள்வோம். 

சுவிசேஷத்துடன் தொடர்பு:

ஏவாளின் வாழ்க்கையை நாம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துடன் ஆழமாக ஒப்பிட்டுப்பார்ப்போம்.  ஒரு தனி மனிதனின் வீழ்ச்சியால் பாவமும் மரணமும் மனுகுலத்திற்குள் வருகின்றது. இந்த காரியங்கள் மனுகுலத்தை மீட்டுக்கொள்ள ஒரு இரட்சகரின் தேவையை உருவாக்குகிறது. இது இயேசு கிறிஸ்துவால் நிறைவேற்றப்படுகிறது. இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியானது, மீட்பு மற்றும் மறுசீரமைப்பு, ஏவாளின் செயல்களின் மூலம் விளைந்த விளைவுகளையும் அதற்கான மீட்பின் ரகசியத்தையும் வெளிப்படுத்துகிறது. (1 யோவா. 5:16). இந்த வசனத்தின் மூலம் நியாயப்பிரமாணத்தைத் தாண்டி  தேவனின் கிருபை செயல்படுகிறது என்பதை நமக்கு தெளிவாக காண்பிக்கிறது. இயேசுவின் சிலுவை மரணத்தின் மூலம், தேவனுடைய ஜனங்கள் இரட்சிக்கப்படுகிறார்கள். மனிதர்கள் தேவனுடன் புதிய உடன்படிக்கைக்குள்ளாகவும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு புதிய வாழ்க்கையை அனுபவிக்கவும் இயேசுவின் மூலம் மற்றொரு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது.

வேதாகமத்தின் பிறப் பகுதிகளில் ஏவாள்:

ஏவாள் ஆதியாகமத்தில் மட்டுமல்லாமல், பைபிளின் பல்வேறு பகுதிகளிலும் ஏவாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது:

  1. ஆதியாகமம் 2:21-22ல், கர்த்தர் ஆதாம் விலா எலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கி, அவளை அவனிடம் கொண்டு வந்தார். 

  2. ஆதியாகமம் 3 வேதத்தின் மிக முக்கியமான பகுதியாகும், அது மனுக்குலத்தின் வீழ்ச்சியை விவரிக்கிறது. 

  3. ஆதியாகமம் 4:1 தனது முதல் குமாரனாகிய காயினுக்குப் பெயரிட்டாள் என்று காண்கிறோம்.  

  4. 1 தீமோத்தேயு 2:13-14ல், பவுல் திருச்சபையில் ஒழுங்கு மற்றும் கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தை கூறுவதற்காக, மனுகுல வீழ்ச்சியில் ஏவாளின் இடத்தை குறிப்பிடுகிறார். “'மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை, ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள்.”

  5. 2 கொரிந்தியர் 11:3 இல், “ஆகிலும், சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல, உங்கள் மனதும் கிறிஸ்துவைப்பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” ஏவாள் சர்ப்பத்தினால் ஏமாற்றப்பட்டதற்கு இணையாக, வழிதவறிச் செல்லப்படும் அபாயத்திற்கு எதிராக பவுல் எச்சரிக்கிறார். 

இறையியல் கருத்துக்கள்:

1.பாவத்தின் தன்மை: ஏவாள் கர்த்தரின் கட்டளையை மீறியதன் மூலம் பாவத்தின் இயல்பு வெளிப்படுகிறது.ஏவாளின் கீழ்ப்படியாமை பாவத்தின் தன்மையை தேவனின் அதிகாரத்திற்கு எதிரான கிளர்ச்சியாக வெளிப்படுத்துகிறது. பாவம் என்பது வெறும் உலகத்திற்க்குரிய செயல் மட்டுமல்ல, அது  தேவ சித்தத்திலிருந்து விலகுவதும் ஆவிக்குரிய  மற்றும் நீதியின் பாதையிலிருந்து விலகுவதற்க்கு வழிவகுக்கும் என்பதை இது காட்டுகிறது.

2. ஆதியில் உண்டான பாவத்தின் கருத்து: ஏவாளின் வாழ்க்கை பெரும்பாலும் ஆதி பாவம் என்ற ஜென்ம பாவத்தின் கருத்தை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது, எல்லா மனிதர்களும் ஆதாம் மற்றும் ஏவாளிடமிருந்து பெற்ற பாவ இயல்புடன் பிறந்தவர்கள் என்பதை வேதம் விளக்குகிறது. தேவனுடைய கிருபையும், மன்னிப்பும் இதில் வெளிபடுத்தப்படுகின்றன.

உங்களுக்கு தெரியுமா? 

1. ஏவாளின் பாரம்பரியம் யூத மரபில்: யூத மரபில், ஏவாளை "ஹவா" எனக் குறிப்பிடுகிறார்கள், இது அனைத்து உயிரினங்களின் தாயாக அவரது பங்கைக் குறிப்பிடுகிறது. கூடுதலாக, சில யூத நூல்கள், ஏவாளை புத்திசாலியும், இரக்கமுள்ளவராகவும் விவரிக்கின்றன, அதில் அவளின் நல்ல பண்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

2. ஜீவவிருட்சத்துடன் ஏவாளின் தொடர்பு: வீழ்ச்சிக்குப் பிறகு, ஜீவவிருட்சத்தின் வழியைப் பாதுகாக்க தேவன் கேருபீன்களையும் சுடரொளிப் பட்டயங்களையும் வைக்கிறார் (Genesis 3:24). 22. இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து, புசித்து, என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று, 23 அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார். 24 அவர் மனுஷனைத் துரத்திவிட்டு, ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல்செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேரூபீன்களையும், வீசிக்கொண்டிருக்கிற சுடரொளிப் பட்டயத்தையும் வைத்தார்.

சில விளக்கவுரைகள் தேவனின் இந்த செயல்கள் ஆதாமும் ஏவாளும் வாழ்வின் மரத்திலிருந்து சாப்பிட்டு பாவ நிலையில் என்றென்றும் அவர்கள் வாழ்வதை தடுப்பதற்கான தேவனின் ஒரு பாதுகாப்பு நடவடிக்கையாகும் என்று கூறுகின்றன.

3. ஏவாளின் தாக்கம் கிறிஸ்தவக் கலைவில்: வரலாற்றில் ஏவாள் கிறிஸ்தவக் கலைச்சித்திரங்களில் மையப் பாத்திரமாக விளங்குகிறாள், முக்கியமாக ஏதேன் தோட்டமும், மனுகுல வீழ்ச்சி காட்சிகளிலும் முக்கிய பாத்திரமாக காணப்படுகிறாள். அவளின் உருவம், காலத்திற்கு ஏற்றவாறும், இறையியல் மற்றும் பண்பாட்டு கலாச்சார கண்ணோட்டங்களில் ஏற்ப்படும் மாற்றத்தைக் காட்டுகிறது.

4. ஏவாளின் முதல் தையல் வேலை: ஆதியாகமம் புத்தகத்தில், ஏவாள்தான் முதல் "தையல்காரி" என்று சொல்லலாம். பாவம் செய்த பிறகு, தங்களது நிர்வாணத்தை உணர்ந்த ஆதாமும் ஏவாளும், அத்திமரத்தின் இலைகளைத் தைத்து அரைக்கச்சைகளை உண்டாக்கினார்கள். இதுதான் மனித வரலாற்றில் முதல் ஆடை.ஆடைகள் வெட்கத்தை மறைப்பதற்கும், உடலைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.ஆடைகள் வெட்கத்தை மறைப்பதற்கும், உடலைப் பாதுகாப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன.

அத்தியிலைகளைத் தைக்கிறார்கள் என்று காண்கிறோம். ஆதியாகமம் 3 : 7 அத்தியிலைகளைத் தைத்து, தங்களுக்கு அரைக்கச்சைகளை உண்டுபண்ணினார்கள் பின்னர், தேவன் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தோல் உடைகளை உண்டாக்கி உடுத்தினார் (ஆதியாகமம் 3:21). இது மேம்பட்ட ஆடை வகையாகும், மேலும் நீண்ட காலம் நிலைக்கக்கூடியது.

முடிவாக ஏவாளின் வாழ்க்கை என்பது ஆழமான ஆவிக்குரிய  மற்றும் வேதாகம கண்ணோட்டங்களை வெளிப்படுத்தும் ஒரு அழகு செறிந்த ஓவியமாகும், பாவம், மீட்பு மற்றும் மனிதனின் நிலையைப் பற்றிய முக்கியப் அறிவுறுத்தல்களை இந்த பகுதி நமக்கு விளக்குகிறது. ஏவாளின் வாழ்க்கையின்  மூலம், கர்த்தரின் கட்டளையை  மீறுவதன் விளைவுகளையும், அதினால் நாம் சந்திக்கும் விளைவுகளையும்,  மீட்பரின் அவசியத்தையும் நம்மால் காண முடிகிறது. அதே நேரத்தில், அனைத்து உயிர்களுக்கும் தாயான ஏவாளின் பங்கு, தேவனின் அநாதி திட்டத்தில் அவளின் முக்கியத்துவத்தை வெளிபடுத்துகிறது. ஏவாளின் வாழ்க்கையை நமது நினைவில் கொண்டு வரும்போது, ஒரு சிறு கீழ்படியாமை ஒட்டு மொத்த மனுக்குலத்தின் எதிர்காலத்தை மாற்றிவிட்டதை பார்க்கலாம். நாம் கர்த்தரின் கற்பனைகளுக்கு கீழ்படிந்து வாழ அழைக்கப்படுகிறோம். நியாயப் பிரமாணத்தை மீறுவதே பாவம் என்று வேதம் நமக்கு காட்டுகிறது. நம்முடிய மாம்சம் பெலவீனமானதுதான் ஆனால் கர்த்தரிடம் அதற்கான பலனைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டும். தேவன் நம்மை வழிநடத்துவாராக. 

“பொய்யினால்  வஞ்சிக்கப்பட்டு

பேராசையால்  இச்சிக்கப்பட்டு

பழத்தினால்;  

பரமனின்  தோட்டத்தை  விட்டுத் துரத்தப்பட்டார்கள்”….

 

பராபரனின் பாதையில் 

ரெமினா சுஜித்

About the Author
Remina Sujith
Remina Sujith

ECE Engineering graduate, previously excelled as VLSI Physical Design Engineer for three years, optimizing 3nm technology at MediaTek and leading companies. Now fully dedicated to ministry with hubby.