இன்று பல இடங்களில் திருநெல்வேலி திருச்சபையின் பாரம்பரியம் என்ற வார்த்தை உபயோகிக்கபடுகிறது. அது என்ன திருநெல்வேலி திருச்சபையின் பாரம்பரியம் என்பதை இப்பதிவில் காண்போம்.
திருநெல்வேலி திருச்சபையின் வரலாறு 1780ல் பாளையங்கோட்டையில் உள்ள சிறு ஆலயமான குளோரிந்தா ஆலயத்தில் இருந்து துவங்குகிறது. நாற்பது விசுவாசிகளுடன் ஆரம்பமான திருச்சபை நாளடைவில் கிறிஸ்துவின் அன்பால் கடற்மண் போல பெருகியது. ஆரம்பத்தில் SPCK எனும் மிசனரி சங்கத்தினரால் நடந்தப்பட்ட திருச்சபை SPG,CMS எனும் மாபெரும் தரிசனத்துடன் இறங்கிய இரு ஆங்கிலிக்கன் மிசனரி சங்கங்களின் வசம் சேர்ந்தது. ரேனியஸ் ஐயர் தொடங்கி கால்டுவெல், மர்காசிஸ், சாப்டர் போன்ற பல மிசனரிகள் இந்த மிசனரி சங்கங்களின் மூலமே வந்திறங்கினர். திருச்சபை வளர்ந்து பெருகி சுதந்திர இந்தியாவில் சுயாதீனம் பெற்று தென் இந்திய திருச்சபை ஒன்றியத்துடன் இணைந்தது. இந்த திருச்சபை ஒன்றியத்தில் இணைந்த பல திருச்சபைகள் ஆங்கிலிகன் சபையின் பல கோட்பாடுகளை தன்னகத்தே சொந்தமாக்கினர். உதாரணமாக மூப்பர், சபை ஆளுகை முறை சபைகள் சபை ஒருங்கிணைப்பில் இணையும் போது பேராயர் ஆளுகை முறையை ஏற்றுகொண்டனர். ஒன்றியத்தில் வெவ்வேறு சபைகளின் விசுவாச முறைகளை அவரவர்களே தேர்ந்தெடுக்கும் சுயாதீனம் அதாவது உரிமை அளிக்கப்பட்டது. திருநெல்வேலி திருமண்டலம் தான் அதுவரை பின்பற்றி வந்த ஆங்கிலிக்கன் வழிமுறைகளை பின்பற்றியது. மட்டுமல்லாமல் இன்றளவும் ஆங்கிலிக்கன் சபையின் உறுப்பினராகவும் உள்ளது.
நம் சபையில் எதெல்லாம் ஆங்கிலிக்கன் பாரம்பரியத்தை சார்ந்தது?
சபையின் அமைப்பு: ஆங்கிலிக்கன் சபை அமைப்பில் அமைந்தது. ( திருநெல்வேலி கிழக்கு பகுதியில் Orthodox Anglican அமைப்பிலும், மேற்கு பகுதியில் Reformed Anglican அமைப்பிலும் காணப்படுகிறது)
சபையில் உட்புற அமைப்பு: ஆங்கிலிகன் சபை அமைப்பில் அமைந்தது. (திருநெல்வேலி கிழக்கு பகுதியில் Orthodox Anglican அமைப்பான Alter க்கும் Alter Table க்கும் இடையில் இடைவெளி இன்றி, மேற்கு பகுதியில் Reformed Anglican அமைப்பான Alter மற்றும் Alter Table க்கும் இடையே இடைவெளி விட்டும் காணப்படுகிறது)
சபையின் சின்னங்கள்: நம் சபையில் காணப்படும் சின்னங்களான சிலுவை, புறா, பிற சின்னங்கள், சபையின் வண்ணங்கள் (குருவானவர் உபயோகபடுத்தும் ஸ்டோல், சபையை அலங்கரிக்க உதவும் துணிகள்) போன்றவை ஆங்கிலிக்கன் பாரம்பரியத்தை சார்ந்தவை.
இசை கருவிகள்: ஆர்கன், பாடகர் குழு போன்ற ஆங்கிலிக்கன் சபையின் வழக்கங்கள் நம் திருச்சபையில் பின்பற்றி வருகிறோம்.
ஆராதனை முறைமைகள்: இன்று நாம் சபையில் ஜெபிக்கும் சுருக்க ஜெபங்கள், நற்கருணை ஆராதனை முறைமை (முதல் முறைமை), காலை மாலை ஆராதனை முறைமை, லித்தானியா, திருமணம், இறப்பு, ஞானஸ்நானம் மற்றும் பல ஆராதனை முறைமைகள் ஆங்கிலிக்கன் ஆராதனை முறைமையாகும். தென் இந்திய திருச்சபையின் நற்கருணை முறைமை 1970 களில் நம் ஆராதனை முறைமையோடு இணைக்கப்பட்டது. சுயாதீனம் பெற்ற ஆங்கிலிக்க விசுவாசத்தில் திளைத்த திருச்சபையாக நம் திருச்சபை விளங்குகிறது.
சபையில் காணப்படும் பொருட்கள்: ஞானஸ்நான தொட்டிகள், பிரசங்க பீடங்கள், நம் திருச்சபை இந்திய திருச்சபை என்பதால் குத்துவிளக்குகள் வைக்கபட்டிருக்கும். ஆங்கிலிக்கன் சபை மூல உபதேசத்தின் படி ஒரு நாட்டின் கலாச்சாரத்தோடு பாரம்பரியமானது இணைக்கபட்டிருக்கிறது.
விசுவாசம்: நம் திருச்சபையின் மூல விசுவாசம் நம் ஜெப புத்தகத்தில் உள்ள 39 மூல உபதேசங்களை அடிப்படையாக கொண்டதே. (The Book of common prayer என்ற ஆங்கிலிக்க சபையின் ஜெபபுத்தகமே ரேனியஸ், கால்டுவெல் போன்ற மிசனரிமார்களால் மொழிபெயர்க்கப்பட்டு நம் கைகளில் இன்று ஜெப புத்தகமாக வலம் வருகிறது)
சபையின் ஒழுங்கு: திருச்சபை நாள்காட்டி, திருச்சபையின் பண்டிகைகள் (உதாரணம்: திருத்துவ திருநாள்) ஆங்கிலேய திருச்சபையை சார்ந்து உள்ளது.
பேராயர் ஆளுகை முறை: ஏபிஸ்கோபி எனப்படும் வரலாற்று பூர்வமான அப்போஸ்தல பேராயர் ஆளுகை முறை ஆங்கிலிக்க சபையின் மூலமே நம் திருமண்டலத்திற்கு வருகிறது. (நம் பேராயர் கருநீல நிறமுடைய அங்கிகளே உபயோகபடுத்துவர். காரணம் ஆங்கிலிக்கன் திருச்சபையே, பேராயரின் மேலங்கி தென் இந்திய திருச்சபையின் தனித்துவ இந்திய தன்மையை வெளிபடுத்த காவி நிறத்தில் உள்ளது)
சுருக்கமாக சொல்ல போனால் நாம் ஆங்கிலிக்க விசுவாச மரபுடைய தென் இந்திய திருச்ச்பையார். நம்முடைய பாரம்பரியமான நம் விசுவாச மரபு 2000 வருட பழமை வாய்ந்தது. ஆங்கிலிக்க சபையின் விசுவாச மற்றும் ஊழிய அஸ்திபாரம் நம் வேதத்தில் உள்ள ஆதித்திருச்சபையான எபேசு சபையில் இருந்து வந்தது. நம் திருநெல்வேலி திருச்சபையின் விசுவாச மரபு ஆங்கிலிக்க சபை மூலமாக ஆதித்திருச்சபையான எபேசு சபையில் இருந்து கிளைத்த விசுவாச மரபு. இதுவே நம் பாரம்பரியம்.
Scripted by
Sujith Rex
Tinnevelly Christian Historical Society
துணை நின்ற நூல்கள்:
திருநெல்வேலி திருமண்டல நற்போதகம் (1923)
தென் இந்திய திருச்சபை வரலாறு,
Bishopric (History of Tinnevelly Church)
Anglican Communion (Website)
Book of Common Prayer
The annotated Book of Common Prayer: being an historical, ritual, and theological commentary on the devotional system of the Church of England
The Declaration of clergy on ritual